1 இராஜாக்கள் 12-1-33, 13:1-10; 14:1-20; 2 நாளாகமம் 10,11
முன்னுரை
கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களை எகிப்தின் அடிமைதனத்திலிருந்து அழைத்து வந்தார். அவர்கள் மோசேயினால் வழி நடத்தப்பட்டார்கள். பிறகு யோசுவாவினால் வாக்குத்தத்த பூமியை சுதந்தரித்து கொண்டார்கள். யோசுவாவுக்கு பிறகு இஸ்ரவேல் ஜனங்களை வழி நடத்த ஒரு தனி நபர் யாரும் தெரிந்தெடுக்கப்படவில்லை. அதற்கு பதிலாக நியாயாதிபதிகள் அவர்களை வழி நடத்தினார்கள். எப்போதெல்லாம் அவர்களுக்கு சத்துருக்கள் எழும்புகிறார்களோ, அப்போதெல்லாம் கர்த்தர் நியாயாதிபதிகளை எழுப்பி அவர்களைக் கொண்டு தன் ஜனங்களை இரட்சித்து வந்தார். இவர்களில் தெபொராள், கிதியோன், சிம்சோன் என்பவர்கள் நாம் நன்கு அறிந்த நியாயாதிபதிகள். ஏலியும் இஸ்ரவேலின் நியாயாதிபதியாய் இருந்தார். அவருக்கு பிறகு சாமுவேல் இஸ்ரவேலரை வழி நடத்தி வந்தார்.
அந்நாட்களில் பெலிஸ்தரின் இடையூறுகள் இஸ்ரவேலருக்கு அதிகமாக இருந்தது. அதினால் அவர்கள் தங்களுக்கு ஒரு ராஜா வேண்டும் என்று சாமுவேலிடம் போய் கேட்டார்கள். ஏனெனில் சாமுவேலின் பிள்ளைகளும் சாமுவேலைப்போல இல்லை. அதினால் அவர்கள் எங்களுக்கு ஒரு ராஜா வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். கர்த்தர் நான் உங்களோடே இருந்து வழி நடத்துகிறேனே என்று சொல்லியும் அவர்கள் கண்கள் காணும்படி மற்ற தேசங்களுக்கு ராஜா இருக்கிறதுப்போல எங்களுக்கும் வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள். அதின்படி கர்த்தர் சவுலை தெரிந்துக்கொண்டு சாமுவேலை நோக்கி அவரை இஸ்ரவேலின் ராஜாவாக அபிஷேகம் பண்ணம்படி சொன்னார். அதின்படியே சவுல் ராஜாவானானர். 40 வருடம் இஸ்ரவேலின்மேல் ராஜாவாக இருந்தார். ஆனால் கர்த்தரின் வார்த்தையின்படி அமலேக்கியரை முற்றிலும் அழிக்காமல், அமலேக்கியரின் ராஜாவாகிய ஆகாகையும், முதல் தரமான ஆடு மாடுகளை அழிக்கமனதில்லாமல் கொண்டுவந்ததால், கர்த்தர் சவுலை ராஜாவாக்கினது எனக்கு மனஸ்தாபமாய் இருக்கிறது என்று மனம் வருந்தினார். ஆனாலும் சவுல் 40 வருடம் அரசாண்டார். இதன் இடையில் கர்த்தர் சாமுவேலை நோக்கி நீ போய் தாவீதை ராஜாவாக அபிஷேகம் செய் என்று சொன்னார். அதன்படி சாமுவேலும் தாவீதை ராஜாவாக அபிஷேகம் செய்தார். சவுலுக்கு பிறகு தாவீது ராஜாவாகி 40 வருடம் அரசாண்டார். கர்த்தருக்கு பிரியமானபடியும் அவர் நடந்துக்கொண்டார். அதினால் கர்த்தர் தாவீது ராஜாவுக்கு உன் பிள்ளைகள் தங்கள் முழு இருதயத்தோடும் தங்கள் முழு ஆத்துமாவோடும் எனக்கு முன்பாக உண்மையாய் நடக்கும்படிக்குத் தங்கள் வழியைக் காத்துக்கொண்டால், இஸ்ரவேலின் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கத்தக்க புருஷன் உனக்கு இல்லாமற்போவதில்லை என்று வாக்குதத்தம் கொடுத்திருந்தார். அதன்படி தாவீதின் குமாரன் சாலொமோன் ராஜாவானார். இவரும் துவக்கத்திலே கர்த்தருக்கு பிரியமான நல்ல ராஜாவாக அரியணை ஏறினார். தேவனுடைய ஆலயத்தை வெகு சிரத்தையாய் தேவன் கட்டளையிட்டிருந்த படியே கட்டி முடித்து அதை கோலாகலமாக பிரதிஷ்டையும் செய்தார். தேவனுடைய மகிமை வந்து இறங்கி ஆசாரியர்கள் ஆலயத்திற்குள்ளே நுழையக்கூடாதபடி இருந்த அந்த மகிமையான காட்சியைக் கண்ட இதே சாலொமோன் ராஜா, தன் வயதான காலத்தில் சீதோனியரின் தேவியாகிய அஸ்தரோத்தையும், மோவாபியரின் தேவனாகிய காமோசையும், அம்மோன் புத்திரரின் தேவனாகிய மில்கோமையும் பணிந்துகொண்டார். அவருக்கு அநேக புற ஜாதியைச் சேர்ந்த மனைவிகள் இருந்தப்படியால், அவருடைய வயதான காலத்தில் அந்த மனைவிகள் அவரை கர்த்தரைவிட்டு விலகப்பண்ணி, தங்கள் தேவனிடமாய் அவரைத் திருப்பிவிட்டார்கள். தேவனே இதைக்குறித்து இப்படியாக சொல்லுகிறார் “அவன் தகப்பனாகிய தாவீதைப்போல என் பார்வைக்குச் செம்மையாய் இருக்கிறதைச் செய்யவும், என் கட்டளைகளையும் என் நியாயங்களையும் கைக்கொள்ளவும், அவர் என் வழிகளில் நடவாமற்போனான்”. 1 இராஜா 11:33.
ஆகையால் கர்த்தர் ராஜ்யபாரத்தை சாலொமோனின் குமாரன் கையிலிருந்து எடுத்து, அதிலே பத்துக் கோத்திரங்களை யெரொபெயாமுக்கு கொடுக்க முடிவு செய்தார்.
என் நாமம் விளங்கும்படிக்கு, நான் தெரிந்துகொண்ட நகரமாகிய எருசலேமிலே என் சமுகத்தில் என் தாசனாகிய தாவீதுக்கு எந்நாளும் ஒரு விளக்கு இருக்கத்தக்கதாக, அவன் குமாரனுக்கு ஒரு கோத்திரத்தைக் கொடுப்பேன் (1 இராஜாக்கள் 11:35-36) என்று யெரொபெயாமுக்கு சொன்னார். ராஜா சாலொமோன் 40 வருடம் அரசாண்டு மரித்தபின். கர்த்தரின் வார்த்தையின்படியே சாலொமோனுக்கு பிறகு ராஜ்யம் பிரிக்கப்பட்டது..
10 - 2 கோத்திரங்களாக பிரிக்கப்பட்டது. ஒன்று இஸ்ரவேல் தேசம் என்றும், மற்றொன்று யூதா தேசம் என்றும் அழைக்கப்பட்டது.
யெரொபெயாம்
பிரிக்கப்பட்ட இஸ்ரவேல் தேசத்தின் முதல் ராஜா தான் இந்த யெரொபெயாம். அவர் அரசாண்ட காலக்கட்டம் 931 BC – 910 BC. அவர் இருபத்திரண்டு வருடம் ராஜாவாக இருந்தார்.
யெரொபெயாம் ராஜாவாக வாய்ப்பு:
கர்த்தர் தாவீது ராஜாவுக்கு வாக்குதத்தம் கொடுத்திருந்தார், உன் பிள்ளைகள் தங்கள் முழு இருதயத்தோடும் தங்கள் முழு ஆத்துமாவோடும் எனக்கு முன்பாக உண்மையாய் நடக்கும்படிக்குத் தங்கள் வழியைக் காத்துக்கொண்டால், இஸ்ரவேலின் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கத்தக்க புருஷன் உனக்கு இல்லாமற்போவதில்லை என்று. ஆனால் சாலொமோன் ராஜா செய்த பாவத்தினால், அவருக்கு பிறகு கர்த்தரால் இஸ்ரவேல் ராஜ்யம் பிரிக்கப்பட்டு பத்து கோத்திரங்கள் யெரொபெயாமுக்குக் கொடுக்கப்பட்டது.
சாலொமோனின் குமாரனான ரெகொபெயாமுக்கு யூதாக்கோத்திரமும், பெனியமீன் கோத்திரமும் மாத்திரம் கொடுக்கப்பட்டது. ரெகொபெயாம் யூதாவின்மேலும், எருசலேமில் குடியிருந்த மற்ற கோத்திர ஜனங்களின்மேலும் ராஜாவாய் இருந்தார். இந்த தேசம் யூதா தேசம் என்று அழைக்கப்பட்டது.
யெரொபெயாம் இஸ்ரவேலின் வடக்கு பகுதி தேசங்களுக்கு ராஜாவாக இருந்தார். இவர் அரசாண்ட தேசம் இஸ்ரவேல் தேசம் என்று அழைக்கப்பட்டது.
யார் இந்த யெரொபெயாம்?
யெரொபெயாம் எப்பிராயீம் தேசத்தில் சேரேதா ஊரை சேர்ந்தவர். அவர் தந்தையின் பேர் நேபாத், அவர் தாயின் பேர் செரூகாள். யெரொபெயாமின் தந்தை மரித்துப் போய் அவர் தாய் விதவையாய் இருந்தாள் என்று வேதவசனத்தில் வாசிக்கிறோம்.
யெரொபெயாம் பராக்கிரமசாலியாய் இருந்தார். அவர் காரிய சமர்த்தனான வாலிபனாயும் இருந்தார். இதினால் சாலொமோன் மில்லோவைக்கட்டி, தன் தகப்பனாகிய தாவீதுடைய நகரத்தின் இடிந்துபோன இடங்களைப் பழுது பார்த்தபோது, யெரொபெயாமை யோசேப்பு வம்சத்தாரின் காரியத்தையெல்லாம், விசாரிக்க அவரிடம் ஒப்புவித்தார். அந்த வேலையை யெரொபெயாம் திறமையாய் செய்து வந்தார்.
யெரொபெயாமைக்குறித்து கர்த்தரின் திட்டம் வெளிப்படுத்தப்படுதல்:
சீலோனியனான அகியா என்னும் தீர்க்கதரிசி, யெரொபெயாம் எருசலேமிலிருந்து வெளியே போகிறபோது அவரைக் கண்டார். அகியா தீர்க்கதரிசி புதுசால்வையைப் போர்த்துக் கொண்டிருந்தார். அவர்கள் வயல் வெளியிலே தனித்திருக்கையில், அகியா தான் போர்த்துக்கொண்டிருந்த புதுச்சால்வையைப் பிடித்து, அதைப் பன்னிரண்டு துண்டாகக் கிழித்துப்போட்டு, யெரொபெயாமைப்பார்த்து பத்து துண்டுகளை எடுத்துக்கொள் என்றார். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் ராஜ்யபாரத்தைச் சாலொமோனுடைய கையிலிருந்து எடுத்துக் கிழித்து, உனக்குப் பத்துக் கோத்திரங்களைக் கொடுப்பேன். ஆனாலும் தாவீதுக்காகவும், தேவன் தெரிந்துக் கொண்ட எருசலேம் நகரத்திற்க்காகவும் ஒரு கோத்திரம் அவனுக்கு இருக்கும் என்றார். நான் தெரிந்துகொண்டவனும், என் கற்பனைகளையும் என் கட்டளைகளையும் கைக்கொண்டவனுமான என் தாசனாகிய தாவீதினிமித்தம், சாலொமோன் உயிரோடிருக்கும் நாளெல்லாம் அவனை அதிபதியாக வைப்பேன். அவர் குமாரன் காலத்தில் அதை எடுத்துப்போடுவேன் என்றார்.
யெரொபெயாமிடம் கர்த்தரின் எதிர்பார்ப்பு:
கர்த்தர்: நீ உன் மனவிருப்பத்தின்படி ஆண்டுகொண்டு, இஸ்ரவேலின்மேல் ராஜாவாய் இருப்பதற்காக நான் உன்னைத் தெரிந்துகொண்டேன்.நான் உனக்குக் கட்டளையிட்டதையெல்லாம் நீ கேட்டுக் கைக்கொண்டு, நீ என் வழிகளில் நடந்து, என் தாசனாகிய தாவீது செய்ததுபோல, என் கட்டளைகளையும் என் கற்பனைகளையும் கைக்கொள்ளும்படிக்கு என் பார்வைக்குச் செம்மையானதைச் செய்கிறதுண்டானால், நான் உன்னோடிருந்து, நான் தாவீதுக்குக் கட்டினதுபோல உனக்கும் நிலையான வீட்டைக் கட்டி இஸ்ரவேலை உனக்குத் தருவேன் என்றார். இப்படியான ஒரு எதிர்பார்ப்பு கர்த்தருக்கு யெரொபெயாமின்மேல் இருந்தது.
சாலொமோனின் கோபம்:
யெரொபெயாமை தேவன் ராஜாவாக்க போகிறார் என்று அறிந்த சாலொமோன் ராஜா யெரொபெயாமை கொல்ல வகைத்தேடினார். தன் ராஜ்யபாரம் தன் குமாரனுக்கு கிடைக்கவேண்டும் என்று நினைத்து யெரொபெயாமை தேடினார்.
யெரொபெயாமின் ஓட்டம்:
சாலொமோன் தன்னை கொல்ல வகைதேடுவதை அறிந்த யெரொபெயாம், அங்கிருந்து எகிப்திற்கு ஓடிபோனார். அங்கே சீஷாக் என்னும் எகிப்தின் ராஜாவினிடத்தில் சாலொமோன் மரணம் அடையும் மட்டும் அங்கே இருந்தார். எகிப்தின் ராஜாவாகிய சீஷாக் தன் மனைவியின் சகோதரியை அவனுக்கு மனைவியாக கொடுத்தார். அவர்களுக்கு பிறந்த குமாரன் அபியா என்பவன்.
ரெகொபெயாமின் மறுப்பு:
சாலொமோன் ராஜா மரணமடைந்தபின் ரெகொபெயாமை ராஜாவாக்கும்படி, இஸ்ரவேலர் எல்லாரும் சீகேமுக்கு வந்திருந்தார்கள். ரெகொபெயாமும் அங்கே வந்திருந்தார்.
யெரொபெயாமையும் அங்கே வரும்படி இஸ்ரவேலர் அழைப்பித்தார்கள். இஸ்ரவேலர் ரெகொபெயாமிடம் சாலொமோன் சுமத்தின பாரமான சுமையை (வரியின் தொகையை குறைக்க) இலகுவாக்க கேட்டுக் கொண்டார்கள், அவனோ நான் இலகுவாக்காமல் இன்னும் பாரமாக்குவேன் என்று கூறியதால், இஸ்ரவேல் ஜனங்கள் ராஜாவுக்கு மறுஉத்தரவாக: தாவீதோடே எங்களுக்குப் பங்கேது? ஈசாயின் குமாரனிடத்தில் எங்களுக்குச் சுதந்தரம் இல்லை. தாவீதே உன் சொந்த வீட்டைப் பார்த்துக்கொள் என்று சொல்லி அவர்கள் தங்கள் கூடாரங்களுக்கு போய் விட்டார்கள்.
ஆனால் யூதாவின் பட்டணங்களிலே குடியிருந்த இஸ்ரவேல் புத்திரர் ரெகொபெயாமை அவர்களுக்கு ராஜாவாக்கினார்கள்.
சமஸ்த இஸ்ரவேலின்மேல் ராஜா:
யெரொபெயாம் திரும்பி வந்தததை அறிந்த இஸ்ரவேலர் அவனை அழைத்தனுப்பி, அவனைச் சமஸ்த இஸ்ரவேலின்மேலும் ராஜாவாக்கினார்கள்.
யெரொபெயாம் எப்பிராயீம் மலைத்தேசத்தில் சீகேமைக் கட்டி, அதிலே வாசம்பண்ணினார். பிறகு அங்கிருந்து போய்ப் பெனூவேலைக் கட்டினார்.
யெரொபெயாமின் பயம்:
யெரொபெயாம் அரசாள துவங்கியபின், இப்போது ராஜ்யபாரம் தாவீது வம்சத்தின் வசமாய்த் திரும்ப போய்விடும் என்று பயந்தார். எருசலேமிலுள்ள கர்த்தருடைய ஆலயத்திலே பலிகளைச் செலுத்த இந்த ஜனங்கள் அங்கேபோகும்போது, இவர்கள் இருதயம் ரெகொபெயாம் பக்கம் திரும்பினால், அவர்கள் என்னைக் கொன்றுப் போட்டு, அவனோடே சேர்ந்துவிடுவார்கள் என்று பயந்தார். ராஜ்யபாரத்தை இழந்துவிடுவோம் என்கிற பயம் அவருக்குள் வந்தது. ராஜாங்கம், அதிகாரம், மேன்மை இவைகளை அவர் இழக்க தயாராய் இல்லை, எப்படியாவது அதை தக்கவைத்துக்கொள்ளவேண்டும் என்று நினைத்தார்.
யெரொபெயாம் யோசனை:
யெரொபெயாம் ருசலேமிலுள்ள கர்த்தருடைய ஆலயத்திலே பலிகளைச் செலுத்த இந்த ஜனங்கள் போவதைத் தடுக்க யோசனைப் பண்ணினார். பொன்னினால் இரண்டு கன்றுக்குட்டிகளை உண்டாக்கி, ஒன்றைப் பெத்தேலிலும், ஒன்றைத் தாணிலும் ஸ்தாபித்தார். பின்பு ஜனங்களைப் பார்த்து, நீங்கள் எருசலேமுக்கு போகிறது வருத்தமான காரியமாய் இருக்கும். அதினால் இவைகள் தான் உங்களை எகிப்துதேசத்திலிருந்து வரப்பண்ணின உங்கள் தேவர்கள் என்று அவர்களுக்கு சொன்னார். இதற்கு பலியிட்டு, ஆராதனைச் செய்யுங்கள் என்றார்.
ஜனங்களும் இந்த ஒரு கன்றுக்குட்டிக்காகத் தாண்மட்டும் போவார்கள்.
யெரொபெயாம் செய்த இந்த காரியம் பாவமாயிற்று:
யெரொபெயாம் செய்தக் காரியத்தை தடுக்கவோ அவருக்கு எடுத்துச் சொல்லவோ யாரும் இல்லை. ஒருவேளை சொல்லியிருந்தாலும் அவர் அதைக் கேட்கும் நிலையிலும் இல்லை. ஆரோன் இதே தவறை செய்தப்போது, அவர் செய்த கன்றுக் குட்டியை மோசே உடைத்துப்போட்டு, ஜனங்களைக் கடிந்துக் கொண்டு, தேவ சமுகத்தில்போய், அவர்களை அழித்துவிடாதிருக்க அவர் சமுகத்தில் விழுந்துக் கிடந்தார்.
யெரொபெயாமின் மீறுதல்:
யெரொபெயாம் மேடையாகிய ஒரு கோவிலையும் கட்டி, லேவியின் புத்திரராயிராத ஜனத்தில் ஈனமானவர்களை ஆசாரியராக்கினார்.
யூதாவில் ஆசரிக்கப்படும் பண்டிகைக்கொப்பாக எட்டாம் மாதம் பதினைந்தாம் தேதியிலே யெரொபெயாம் ஒரு பண்டிகையையும் கொண்டாடி, பலிபீடத்தின்மேல் பலியிட்டார்.
அப்படியே பெத்தேலிலே தான் உண்டாக்கின கன்றுக்குட்டிகளுக்குப் பலியிட்டு, தான் உண்டுபண்ணின மேடைகளின் ஆசாரியர்களைப் பெத்தேலிலே ஸ்தாபித்து, இஸ்ரவேல் புத்திரருக்குப் பண்டிகையை ஏற்படுத்தி, தன் மனதிலே தானே நியமித்துக் கொண்ட எட்டாம் மாதம் பதினைந்தாம் தேதியிலே, பலிபீடத்தின்மேல் பலியிட்டுத் தூபங்காட்டினார்.
லேவியர் கர்த்தருக்கு ஆசாரிய ஊழியஞ்செய்யாதபடிக்கு யெரொபெயாமும் அவர் குமாரரும் அவர்களைத் தள்ளிப்போட்டார்கள். அவர் மேடைகளுக்கென்றும், பேய்களுக்கென்றும், தான் உண்டாக்கின கன்றுக்குட்டிகளுக்கென்றும் ஆசாரியர்களை ஏற்படுத்தினார்.
யார் ஆசாரியராய் இருக்க வேண்டும், என்ன பலியிட வேண்டும், பண்டிகையை எந்த நாளில் ஆசரிக்கவேண்டும் என்று தேவன் எவ்வளவு தெளிவாய் மோசேயின் மூலமாய் இந்த ஜனங்களுக்கு கட்டளைகளாகவும், பிரமாணமாகவும் கொடுத்திருந்தார். ஆனால் யெரொபெயாம் எல்லாவற்றிலும் மீறுதல் செய்தார். துணிகரமாய், சுயநலத்திற்காக, தான் தொடர்ந்து ராஜாவாய் இருக்க இப்படி செய்தார். கர்த்தர் அவரைக் குறித்து அகியா தீர்க்கதரிசியின் மூலமாய் சொன்னப்போது “என் கட்டளைகளையும் என் கற்பனைகளையும் கைக்கொள்ளும்படிக்கு என் பார்வைக்குச் செம்மையானதைச் செய்கிறதுண்டானால், நான் உன்னோடிருந்து, நான் தாவீதுக்குக் கட்டினதுபோல உனக்கும் நிலையான வீட்டைக் கட்டி இஸ்ரவேலை உனக்குத் தருவேன்.” என்று சொல்லியதை மறந்தார்.
எகிப்தின் சவகாசம், அங்கே அந்த ராஜாவோடே இருந்ததின் காரணமாகவும், அங்கே தனக்கு பெண்கொண்டதாலும், தேவன் எந்த நோக்கத்தினால் தன்னை அழைத்தார் என்பதையும், சாலொமோனுடைய ராஜ்யம் வீழக் காரணமான பாவம் என்னவென்று அறிந்திருந்தும் இப்படியாக செய்ய துணிந்தார்.
கர்த்தருக்கு பயந்த லேவியரின் பிறகாலே இஸ்ரவேலின் கோத்திரங்களிலெல்லாம் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைத் தேடுகிறதற்கு, தங்கள் இருதயத்தை நேராக்கினவர்கள் தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடும்படிக்கு எருசலேமுக்கு வந்தார்கள்.
யெரொபெயாமுக்கு கர்த்தருடைய வார்த்தை:
யெரொபெயாம் தூபங்காட்ட பலிபீடத்தண்டையிலே நிற்கையில், தேவனுடைய மனுஷன் ஒருவர் யூதாவிலிருந்து பெத்தேலுக்கு கர்த்தருடைய வார்த்தையின்படியே வந்தார்.
தேவனுடைய மனுஷன் பலிப்பீடத்தைப் பார்த்து கர்த்தருடைய வார்த்தை என்னவென்று கூறினார். “பலிபீடமே பலிபீடமே, இதோ, தாவீதின் வம்சத்தில் யோசியா என்னும் பேருள்ள ஒரு குமாரன் பிறப்பான். அவர் உன்மேல் தூபங்காட்டுகிற மேடைகளின் ஆசாரியர்களை உன்மேல் பலியிடுவான். மனுஷரின் எலும்புகளும் உன்மேல் சுட்டெரிக்கப்படும் என்பதைக் கர்த்தர் உரைக்கிறார்” என்றார்.
அதற்கான அடையாளமாக பலிபீடம் வெடித்து அதின்மேலுள்ள சாம்பல் கொட்டுண்டுபோம் என்றார்,
தேவனுடைய மனுஷன் கூறிய இந்த வார்த்தைகளைக் கேட்ட யெரொபெயாம், அவனைப் பிடியுங்கள் என்று தன் கையை நீட்டினார். அவர் தீர்க்கதரிசிக்கு விரோதமாய் தன் கையை நீட்டினப்படியால் அவர் கை முடக்கக் கூடாதப்படி மரத்துப் போயிற்று.
தேவனுடைய மனுஷன் கூறிய அடையாளத்தின்படியே, பலிபீடம் வெடித்து, சாம்பல் பலிபீடத்திலிருந்து கொட்டுண்டுபோயிற்று.
யெரொபெயாம் தேவனுடைய மனுஷனை நோக்கி, நீ உன் தேவனாகிய கர்த்தருடைய சமுகத்தை நோக்கி வேண்டிக்கொண்டு, என் கை முன்போலிருக்கும்படிக்கு எனக்காக விண்ணப்பம்பண்ணவேண்டும் என்றார்.
அப்பொழுது தேவனுடைய மனுஷன் கர்த்தருடைய சமுகத்தை நோக்கி வருந்தி விண்ணப்பம் பண்ணினார். ராஜாவின் கை முன்னிருந்தபடி சீர்ப்பட்டது.
ராஜா தேவனுடைய மனுஷனை தன் வீட்டுக்கு வந்து இளைப்பாறும் என்றும் வெகுமானம் தருவேன் என்றும் அழைத்தார். தேவனுடைய மனுஷன் நீர் எனக்கு உம்முடைய வீட்டில் பாதி கொடுத்தாலும், நான் உம்மோடே வருவதுமில்லை, இந்த ஸ்தலத்தில் அப்பம் புசிப்பதுமில்லை, தண்ணீர் குடிப்பதுமில்லை என்றார்.
ஏனென்றால் கர்த்தர் நீ அப்பம் புசியாமலும், தண்ணீர் குடியாமலும், போனவழியாய்த் திரும்பாமலும் இருவென்று. அவனுக்கு கட்டளையிட்டிருகிறார் என்று சொல்லி அவர் பெத்தேலுக்கு வந்தவழியாய்த் திரும்பாமல், வேறுவழியாய்ப் போய்விட்டார்.
ஆனாலும் கிழவனான தீர்க்கதரிசி தேவனுடைய மனுஷனை அழைத்துப்போய் புசிக்க வைத்ததினிமித்தமும், அந்த தீர்க்கதரிசி அவரோடேபோய் புசித்ததினிமித்தமும் அவருக்கு மரணம் நேர்ந்தது.
இவைகள் நடந்த பின்பும், யெரொபெயாம் தன் பொல்லாத வழியைவிட்டுத் திரும்பாமல், மறுபடியும் ஜனத்தில் ஈனமானவர்களை மேடைகளின் ஆசாரியராக்கினார். எவன்மேல் அவனுக்கு மனதிருந்ததோ அவனைப் பிரதிஷ்டைப்பண்ணினார். அப்படிப்பட்டவர்கள் மேடைகளின் ஆசாரியரானார்கள்.
இந்த பாவகாரியம் யெரொபெயாமின் வீட்டாரை பூமியின்மேல் வைக்காமல் அதம்பண்ணி அழிக்கும்படியாக நடந்தது.
அவர் மனம் மாறவோ, மனம் திரும்பவோ இல்லை.
யெரொபெயாம் குமாரனின் வியாதி மற்றும் மரணம்:
யெரொபெயாமின் குமரான் அபியா வியாதியில் விழுந்தான். அவனுடைய வியாதி மரணத்திற்கு ஏதுவாய் இருக்கிறதாக கண்ட யெரொபெயாம் தன் மனைவியை வேஷம் மாறி, சீலோவிலே இருக்கிற, தான் ராஜாவாவேன் என்று சொன்ன தீர்க்கதரிசி அகியாவிடம் தன் மகன் பிழைப்பானா என்று அறிய அனுப்பினார். அவளும் யெரொபெயாம் சொன்னப்படி தீர்க்கதரிசிக்கு காணிக்கைகளை எடுத்துக் கொண்டு, பிள்ளையைக் குறித்து அறிய வேஷம் மாறி சென்றாள்.
அகியாவோ முதிர் வயதானதினால் அவர் கண்கள் மங்கலடைந்து பார்க்கக்கூடாதிருந்தார். அவள் வருமுன்னே அவள் எதற்காக வருகிறாள், எப்படியாக வருவாள், அவளுக்கு என்ன சொல்லவேண்டும் என்று தெளிவாக கர்த்தர் வெளிப்படுத்திருந்தார்.
ஆகையால் அவள் வந்தவுடனே, தீர்க்கதரிசி, ஏன் உன்னை அந்நிய ஸ்திரீயாக காண்பிக்கவேண்டும், துக்கசெய்தியை உனக்கு அறிவிக்க நான் அனுப்பப்பட்டேன் என்றார்.
யெரொபெயாமுக்கான மற்றும் அவர் குடும்பத்திற்க்கான முடிவு:
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் யெரொபெயாமுக்கு சொல்லும்படியாக அவர் மனைவியிடம் கூறின வார்த்தைகள் என்னவென்றால், ஜனத்தினின்று உன்னை நான் உயர்த்தி, உன்னை என் ஜனத்தின்மேல் அதிபதியாக வைத்தேன். நான் ராஜ்யபாரத்தைத் தாவீது வம்சத்தாரின் கையிலிருந்து பிடுங்கி உனக்குக் கொடுத்தேன். ஆனாலும் என் கற்பனைகளைக் கைக்கொண்டு, என் பார்வைக்குச் செம்மையானதையே செய்ய, தன் முழு இருதயத்தோடும் என்னைப் பின்பற்றின என் தாசனாகிய தாவீதைப்போல நீ இராமல், உனக்கு முன்னிருந்த எல்லாரைப்பார்க்கிலும் பொல்லாப்புச் செய்தாய். எனக்குக் கோபம் உண்டாக்க, நீ போய் உனக்கு அந்நிய தேவர்களையும் வார்க்கப்பட்ட விக்கிரகங்களையும் உண்டுபண்ணி, உனக்குப் புறம்பே என்னைத் தள்ளிவிட்டாய்.
ஆகையால் இதோ, நான் யெரொபெயாமுடைய வீட்டின்மேல் பொல்லாப்பை வரப்பண்ணி, யெரொபெயாமுக்கு, சுவர்மேல் நீர்விடும் ஒரு நாய் முதலாயிராதபடிக்கு, இஸ்ரவேலிலே அடைபட்டவனையும் விடுபட்டவனையும் சங்காரம்பண்ணி, குப்பை கழித்துப்போடப்படுகிறதுபோல யெரொபெயாமின் பின்னடியாரை அவர்கள் கட்டோடே அற்றுப் போகுமட்டும் கழித்துப்போடுவேன் என்றார்.யெரொபெயாமின் சந்ததியாரில் பட்டணத்திலே சாகிறவனை நாய்கள் தின்னும்; வெளியிலே சாகிறவனை ஆகாயத்தின் பறவைகள் தின்னும் என்று கர்த்தர் உரைத்தார் என்று சொன்னார்.
ஆகையால் நீ எழுந்து உன் வீட்டுக்குப்போ, உன் கால்கள் பட்டணத்திற்குள் பிரவேசிக்கையில் பிள்ளையாண்டான் செத்துப்போவான். அவனுக்காக இஸ்ரவேலரெல்லாரும் துக்கங்கொண்டாடி அவனை அடக்கம்பண்ணுவார்கள். யெரொபெயாமின் வீட்டாரில் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக அவனிடத்திலே நல்ல காரியம் காணப்பட்டதினால், யெரொபெயாமின் சந்ததியில் அவன் ஒருவனே கல்லறைக்குட்படுவான் என்றார்
மேலும் கர்த்தர் தமக்கு இஸ்ரவேலின்மேல் ஒரு ராஜாவை எழும்பப்பண்ணுவேன் அவர் யெரொபெயாமின் வீட்டார் எல்லாரையும் சங்கரிப்பான். இப்போதே இது நடந்தேறும் என்றார்.
தண்ணீரிலே நாணல் அசைகிறதுபோல, கர்த்தர் இஸ்ரவேலை முறித்தசையப்பண்ணி, அவர்கள் பிதாக்களுக்குத் தாம் கொடுத்த இந்த நல்ல தேசத்திலிருந்து இஸ்ரவேலை வேரோடே பிடுங்கி, அவர்கள் தங்களுக்கு தோப்பு விக்கிரகங்களை வைத்து, கர்த்தருக்குக் கோபம் உண்டாக்கினபடியினால், அவர்களை நதிக்கப்பாலே சிதறடித்து, யெரொபெயாம் செய்ததும் இஸ்ரவேலைச் செய்யப்பண்ணினதுமான பாவத்தினிமித்தம் இஸ்ரவேலை ஒப்புக்கொடுத்துவிடுவார் என்றார்.
அப்பொழுது யெரொபெயாமின் மனைவி எழுந்து புறப்பட்டு திர்சாவுக்கு வந்தாள். அவள் வாசற்படியிலே வருகையில் பிள்ளையாண்டான் செத்துப்போனான்.
தீர்க்கதரிசி சொன்னதுபோலவே பிள்ளையாண்டான் செத்துப்போனான். அவனை அடக்கம் பண்ணினார்கள்.
யெரொபெயாமின் அரசாண்ட காலத்தில் நிகழ்ந்த நிகழ்வுகள்:
யெரொபெயாம் எப்பிராயீம் மலைத்தேசத்தில் சீகேமைக் கட்டி, அதிலே வாசம்பண்ணி, அங்கிருந்து போய்ப் பெனூவேலைக் கட்டினார்.
பொன்னினால் இரண்டு கன்றுக்குட்டிகளை உண்டாக்கி, ஒன்றைப் பெத்தேலிலும், ஒன்றைத் தாணிலும் ஸ்தாபித்தார்.
யெரொபெயாமுக்கும் யூதாவின் ராஜாவாகிய அபியாவுக்கும் யுத்தம் நடந்தது. யெரொபெயாம் அவர்களுக்குப் பின்னாக வரத்தக்கதாக ஒரு பதிவிடையைச் சுற்றிப்போகப்பண்ணினார். அப்படியே அவர்கள் யூதாவுக்கு முன் இருந்தார்கள். அந்தப் பதிவிடை அவர்களுக்குப்பின் இருந்தது. யூதா ஜனங்கள் திரும்பிப்பார்க்கிறபோது, முன்னும் பின்னும் யுத்தம் நடக்கிறதைக் கண்டு, கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள். ஆசாரியர்கள் பூரிகைகளை முழக்கினார்கள். யெரொபெயாமின் யுத்தவீரர்கள் 5 லட்சம் பேர் கொல்லப்பட்டார்கள். இஸ்ரவேல் புத்திரர் யூதாவுக்கு முன்பாக முறிந்தோடினார்கள்; தேவன் இஸ்ரவேலரை இவர்கள் கையில் ஒப்புக்கொடுத்தார்.
அபியாம் யெரொபெயாமைப் பின்தொடர்ந்து, அவனுக்கு உண்டான பட்டணங்களாகிய பெத்தேலையும் அதின் கிராமங்களையும், எஷானாவையும் அதின் கிராமங்களையும், எப்பெரோனையும் அதின் கிராமங்களையும் பிடித்தார்.
யெரொபெயாமின் குமாரன் அபியா மரணம் அடைந்தான்.
யெரொபெயாமின் மரணம்:
யெரொபெயாம் இருபத்திரண்டு வருஷம் ராஜ்யபாரம் பண்ணி, நித்திரை அடைந்தார். அவர் குமாரனாகிய நாதாப் அவர் ஸ்தானத்தில் ராஜாவானார்.
பிறகு பாஷா ராஜாவானபின் யெரொபெயாமின் வீட்டாரையெல்லாம் வெட்டிப்போட்டார். யெரொபெயாமுக்கு இருந்த சுவாசமுள்ளதொன்றையும் அவர் அழிக்காமல் விடவில்லை.
கர்த்தரின் வார்த்தைகள் நிறைவேறின. ஒரு தனி மனிதனின் பாவம், குடும்பத்தின்மேலும், தேசத்தின்மேலும் சாபத்தைக் கொண்டுவந்தது.
ஒருவன் தன் வாழ்க்கையில் கர்த்தருக்கு பயப்படும் பயத்தைவிட்டு, தேசத்தின் ஜனங்களை தேவனுடைய வழியில் நடவாமல் அவர்களைத் தவறப்பண்ணின பாவத்தினால், அவர் வீட்டாரில் சுவாசமுள்ளதொன்றும் அவருக்கு இல்லாமல் போயிற்று.
யெரொபெயாம் சேரும் பட்டியல்:
யெரொபெயாம் ஜனங்களின் தேர்வினால் ராஜாவான ராஜாக்களின் பட்டியலில் சேருகிறார்.
யெரொபெயாம் தீர்க்கதரிசனத்தின் வார்த்தைகளின்படியே ராஜாவான ராஜாக்களின் பட்டியலில் சேருகிறார்.
யெரொபெயாம் கர்த்தரின் பார்வையில் பொல்லாப்பானதை செய்த ராஜாக்களின் பட்டியலில் சேருகிறார்.